Saturday, April 21, 2012

குறிக்கோள் எது?


வெற்றிபெற்றவர்களின் வெற்றிப்பாதையினை படித்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கின்றது அல்லவா? எத்தனை தடவைகள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் நம்பிக்கையுடன் அவர்கள் மீள எழுந்த இடங்களே உண்மையில் சரித்திரம்.

ஆனால் இன்று எம் மத்தியில் சிலரை உங்கள் இலட்சியம் என்ன? என்று கேட்டால்……
நாலுபேர் மதிக்கிறமாதிரி அந்தஸ்தோட வாழவேண்டும் எனவும்,
எப்படி என்று தெரியவில்லை என்பார்கள்.
இன்னும் சிலரோ………எனக்கு எல்லாமே நல்லா இருக்கவேண்டும் அதெப்படி? என்ன என்றெல்லாம் சொல்ல முடியாது என்பார்கள்.

இவை எல்லாமே எப்படி என்றால், நான் ஒரு நல்ல இடத்திற்குப்போகவேண்டும்…….. ஆனால் அந்த இடமும் தெரியாது, வழியும் தெரியாது, எந்த வாகனத்தில் போவது என்றும் தெரியாது என்பதாகும்.
அப்படியானால் இவர்களின் பயணம் எப்படி இருக்கும்? பாதையில் சந்திப்பவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை சொல்வார்கள். அங்கெல்லாம் அலைந்து திரியவேண்டியதுதான்.

ஆகவே குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்?

முதலில் எனக்கு என்ன வேண்டும் (Specific) என்பதில் முழுமையான தெளிவு இருக்கவேண்டும். பணம் என்றால் எவ்வளவு? பதவி என்றால் என்ன பதவி? வீடு என்றால் எத்தனை பேர்ச்சஸ்? எந்த இடத்தில் என்பதுபோன்ற தெளிவு வேண்டும்.

இரண்டாவது எந்த அளவு (Measurable) என்பது தெரியவேண்டும். அப்படி என்றால்தான், ஓராண்டில், மூன்றாண்டில், ஐந்தாண்டில் எவ்வளவு அடையலாம் என்பதை நிர்ணயம் செய்துகொள்ளமுடியும்;.

மூன்றாவது அடையக்கூடியதாக (Achievable) இருக்கவேண்டும். அதேவேளை நமது முழுமையான திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்;டும்.


நான்காவது நடைமுறைக்குச்சாத்தியமானதாக(Realistic) இருத்தல்வேண்டும். 

ஐந்தாவது அதை அடையும் கால அளவை மிகச்சரியாக நிர்ணயிப்பதாக (Time -bound)இருக்கவேண்டும். ஆதாவது ஆரம்பிக்கும் நாள், முடிக்கும் நாள் போன்றவற்றை வரையறுக்கவேண்டும்.

இதை ஆங்கிலத்தில் The Goal should be SMART என்பார்கள். அப்படி இருந்தாலத்தான் சரியான இலட்சியமாகும்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய குறிக்கோள் என்னவென்று தெளிவாக தெரிந்துவிட்டால் அதில் பெரும் பங்கை அடைந்துவிட்டான் என்பதை எழுதிவைத்துவிடலாம்.

Saturday, March 31, 2012

சின்ன தோல்விகள் பிரமாண்ட வெற்றிக்கே..




கொல்கத்தா தொடரூர்தி நிலையத்தினுள் ஒரு தொடரூர்தி நுளைகின்றது.
மனது முழுவதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரூர்தியில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.
அடுத்த முறை ஊருக்குத்திரும்புவதற்காக இந்த நிலையத்திற்;கு வரும்போது ஒரு நிரந்தரமான வேலையில் சேர்ந்திருக்கவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்திருந்தான்.

கல்கத்தாவில் சிறு சிறு கூலித்தொழில் புரிந்த தனது நண்பர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய அறையிலே தங்கிக்கொண்டான் அந்;த இளைஞன். ஏற்கனவே அந்த அறையில் நான்கு பேர்! இவன் ஐந்தாம் நபராக. அந்த சின்னஞ்சிறிய அறையில் ஆறு அடி மூன்று அங்குலம் உயரமுடைய இவனால் கால்களை நீட்டி முழுமையாக படுக்கக்கூட முடியவில்லை.

வேலை தேடும் படலத்தை தொடக்கினான். மூன்று மாதங்கள் ஒடியது தான் மிச்சம். நிறுவனங்களின் வெளியே நிற்கும் பாதுகாப்பு நபரை தாண்டி போவதே பெரிய பாடாக இருந்தது. எல்லா இடங்களிலும் களுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறைதான்.
ஏத்தனை நாள்தான் நண்பர்;களின் உழைப்பில் வயிற்றை கழுவுவது அவர்களே பெரிய கஸ்டத்தின் மத்தியில் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.
ஊருக்கே திரும்பிவிடலாம், நான் ஒரு அதிஸ்டம் கெட்டவன், இது எவ்வளவு பெரிய நகரம்! இங்கெல்லாம் நம்மளையா கவனிக்கப்போகிறார்கள்? என பெரும் கவலைகளுடன் கண்ணீர் சொரிய பல இராத்திரிகளில் அழுதிருக்கின்றான் அவன்.
இருந்தபோதிலும் இத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்த இந்த நகரம் எனக்கு ஒரு வேலை கொடுக்காமலா போகப்போகிறது என எண்ணி நம்பிக்கையுடன் இருந்தான்;.

ஒரு நாள் ஓல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள்; தேவை! என்ற விளம்பரத்;தைப்பார்த்து உடனடியாக அதற்கு விண்ணப்பம் செய்தார்;.
இன்று வந்;துவிடுமா? நாளை வந்துவிடுமா? என்று தபால்காரர் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது.

அன்று அந்த அறையில் உற்சாகம் பொங்கி வழிந்தது. நேர்முக அழைப்பு வந்ததற்கே நண்பர்கள் தேனீர் உபசாரம் கொடுத்து கொண்டாடினார்கள்.
அவனது நண்பர்கள் தம் நண்பன் வானொலியில் செய்தி வாசிப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார்கள் 
நேர்முகத்தேர்வு, தன் முறை வருவருவதற்காக காத்திருந்தார். ஓவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். சேய்திகளை மனதினுள்ளே வாசித்துப்பார்த்தார், பல வினோதமான விளம்பரங்களை பல வகைகளில் சொல்லிப்பார்த்துக்கொண்;டார்.
அடிக்கடி தொண்டையை செருமிக்கொண்டார்.

அமிதாப் பச்சன்…….

தனது பெயர் கூப்பிடப்படவே நம்பிக்கையுடன் உள்ளே போனார். பிரவாகம் கட்டவிழ்த்ததுபோல அங்கே நடந்த குரல்தேர்வில் கர்ஜித்தார். விதவிதமான நிகழ்சிகளை தொகுத்துக்காட்டினார். 

நல்லது வெளியில் காத்திருங்கள் முடிவை சொல்கின்றோம் என்றனர் நிலையத்தினர். காத்திருந்தார் காலையில் இருந்து இரவு ஆகியபின்னும்…
தற்;செயலாக உள்ளே இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், ஏன் இருக்கின்றீர்கள் என வினாவினார். விடயத்தை சொன்னதும், உள்ளே சென்று மீண்டும் வந்தவர், 
உங்கள் குரல் சரியில்லை, வானொலிக்கு பொருத்தமாக இருக்காது என்றார்.
அமிதாப்பின் காதில்; அந்த வார்த்தைகள் அமிலமாகவே பாய்ந்தது.

நேரக கடற்கரை சென்று குலுங்க குலுங்க அழுதார்…….

அதன் பின்னர், நடிக்கத்தொடங்கி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சுப்பர் ஸ்ரார் ஆனதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

பின்னர் அந்த சிம்மக்குரலுக்கு ஸ்ரார் ரீ.வி வழங்கிய கௌரவம், குரோர்பதியில் கலக்கியது அமிதாப்பிற்கு சொந்தமாக இன்று எத்தனை ரோடியோ சனல்கள் உள்;ளன என்பதும் உங்களுக்கு தெரியும்…
அமிதாப் பச்சனின் விருப்பப்படி அந்த சின்ன அறிவிப்பாளர் வேலை கிடைத்திருந்தால் உலகத்திற்கு ஒரு பெரிய சுப்பர் ஸ்ரார் கிடைத்திருப்பாரா?

சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே.



Wednesday, March 7, 2012

உபுண்டு



ஆபிரிக்கா தந்த அருமை தத்துவம் உபுண்டு


ஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை 'நீ இல்லாமல் நான் இல்லை' என்பதுதான்.


அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம்உணரவேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது.

நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செயதுள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளதுஎன நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம்.  ச ந்தோசத்திற்கான நிர்வாக முறை.

Monday, March 5, 2012

நினைத்ததைவிட நிறைவாக....




ஒரு காட்டின் நடுவில் திட்டியாக இருந்த நிலத்தில் மூன்று பெருவிருட்சங்கள் இருந்தன. அவை மூன்றும் மிகுந்த இறை பக்தி கொண்டவை.



முதலாவது மரம் மிகப்பருத்த மரமாகவும், இரண்டாவது மரம் ஒரே சீரான உயர்ந்த மரமாகவும், மூன்றாவது மரம் நன்றாக கிளைபரப்பி பொலிவான மரமாகவும் இருந்தன.
இறை துதி பாடும் இந்த மூன்று மரங்களுக்கும் ஒவ்வொரு ஆசை... ஏன் பேராசை என்றுகூடச்சொல்லலாம் அதை. அவற்றின் ஆசைகள் என்ன தெரியுமா?

மிகப்பருத்த முதலாவது மரத்தின் ஆசை தான் பருமன் என்பதால் தன்னைக்கொண்டு மிகச்சிறந்த பெட்டகம் ஒன்று அடைக்கப்படவேண்டும் எனவும் அந்த பெட்டகத்தில் உலகில் விலைமதிப்பில்லாத பொருளொன்று வைக்கப்படவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டது.

இரண்டாவது சீரான உயரமான மரம் வேண்டிக்கொண்டதோ இப்படி... இறைவா நான் சீரான நீளம் உடையவன் என்பதால், என்னை மகாசமுத்திரத்தில் கப்பலாக செய்து ஓட வைக்கவேண்டும், அதில் மன்னாதி மன்னர் ஒருவர் ஏறி பயணம் செய்யவேண்டும் என்றது.

மூன்றாவது மரத்தின் ஆசையோ... இறைவா நான் கிளைபரப்பி அழகாக இருக்கின்றேன் இறைவா... நான் உம்மை ஒரு தடைவ சுமக்கவேண்டும் இதுவே என் அசை என்றது.

அவை வேண்டிக்கொண்ட அடுத்த நாளே காட்டுவாசிகள் வந்து அந்த மூன்று மரங்களையும் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். முதலாவது பருத்த மரத்தை, வெட்டி பெரிதாக தோண்டி, ஆடு மாடுகளுக்கு தீவனம்போடும் பெரிய அண்டாவாக அதை தயாரித்தனர், இரண்டாவது ஒரு தோணியாக்கப்பட்டு தொழு நோயாளர்களையும், ஏழைகளையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டது. மூன்றாவதோ பாவம் இரண்டு நீளமான பலகைகளாக அறுக்கப்பட்டு அரச பட்டறையில் அடைக்கப்பட்டது. 

மூன்றும் தம் ஆசைகளையும் நிறைவேறியிருப்பதையும் நினைத்து வேதனை கொண்டன.

ஓர்நாள் மிகக்கடுமையான குளிர் அடித்தது, வானில் என்றுமில்லாத பிரகாசம், பரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது, அந்த குரல் தீவனம்போட வைக்ககப்பட்டிருந்த பருத்த மரம் இருக்கும் தொழுவத்திற்கு வந்து சேர்தது.
குழந்தையும் பிறந்தது, தந்தையானவர், இந்த பருத்த மரத்தை, சுத்தப்படுத்தி, அதனுள் வைக்கோலை இட்டு, இதமாக பிறந்த குழந்தையினை அதனுள் வைத்தார், ஒளி பொருந்தி அந்த குழந்தையின் ஸ்பரிசம் கிடைக்கும் முன்னமே பருத்த மரம் தன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிய பரவச நிலையை அடைந்தது.

சில வருடங்கள் கழிந்து ஏழைகள் செல்லும் கப்பலில் இளம் துறவி ஒருவர் எறினார், அவர் பாதம் பட்டவுடனேயே அந்த இரண்டாவது மரமாகிய தோணியிடம் ஒரு சிலுசிலுப்பு, ஒரு கட்டத்தில் திடீர் என மழை புயல் என்பன தென்படவே அவர் அதை கட்டுப்படுத்தினார், மன்னாதி மன்னரை எதிர்பார்த்திருந்த அந்த இரண்டாவது மரம் பூரண திருப்தியும் பெருமிதமும் அடைந்தது.

இன்னும் சில வருடங்கள் கழித்து பட்டறையில் கிடந்த மூன்றாவது மரம் அவசர அவசரமாக ஒரு கூட்டல்குறிபோல் தறையப்பட்டு, எடுத்துச்செல்லப்பட்டு, முள் முடி சுமந்த ஒருவர்மேல் வைக்கப்பட்டு, அவர் சவுக்கால் அடிக்கப்பட்டு, இதை காவி ஒருமலைவரை சென்று இதிலேயே அறையப்பட்டார். 

விலைமதிப்பில்லாத பொக்கிசம் கேட்ட முதல் மரத்திற்கு தானே அதனுள் இருந்தும், மன்னாதி மன்னனை கொண்டு செல்லக்கேட்ட இரண்டாவது மரத்திற்கு தன்னையே கொண்டு செல்லவைத்தும், தன்னை காவவேண்டும் என்ற கேட்ட மூன்றாவது மரத்தை தானே காவியும் இறைவன் அருள் கொடுத்தார்.

நம்பிக்கையுடன் இருங்கள் இறைவன் நீங்கள் கேட்பதைவிட அதிகமாகவே தருவார்.

Friday, March 2, 2012

நம் வாழ்க்கையின் MCQ



Multiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன.
அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.

நாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம். 
விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம். 

எமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது.
ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி.
அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.

முன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நாளாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த “மல்ரிபிள் சொய்ஸ்” என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது.
இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் “ரிக்” செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம். இந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது.


மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும். 
தெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை.
தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, “ரிக்” செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.


எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.
பரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை “ரிக்” செய்யவேண்டும். மிகச்சரியானதை “ரிக்” செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை “ரிக்” செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை “ரிக்” செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.

எனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி, அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.

Wednesday, February 29, 2012

ஒபரேசன் தயக்கம்!




தயக்கம்
எம்மில் பெரும்பாலானவர்களிடம் இருந்து களையப்படவேண்டிய குணம் தயக்கமே ஆகும். துயக்கம் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. தயக்கங்களின் காரணமாக பல நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போயிருக்கின்றன.
வாழ்கையில் பல முன்னேற்றங்களையும், புதிய திருப்பங்களையும் இந்த தயக்கம் என்ற ஒரே பதம் இல்லாமல் செய்துவிடுகின்றது.உலகில் வெற்றியாளர்களில் 100 வீதம் பேர், ஏதோ ஒருகட்டத்தில் அவர்களின் முன்னாலே தோன்றிய தயக்கங்களை தகர்த்துதெறிந்துவிட்டு முன்வந்தவர்களாகவே இருப்பார்கள்.

தயக்கம் என்பது, ஒரு விதமான அச்ச உணர்வே, ஏன் வீணாக இதற்கு முயற்சி செய்யவேண்டும?;, இப்போது வேண்டாம், முதலில் யாரும் முயற்சிக்கட்டும் பிறகு நான் பார்க்கலாம், எனக்கேன் இந்த தேவையில்லாதவேலை!, என்பவை போன்ற சிந்தனைகள்தான் தயக்கத்தின் தூதுவர்கள், முக்கியமாக தன்னம்பிக்கை இன்மையே இந்த தயக்கங்களையும் அதன் தூதுவர்களையும் மனிதர்களின் மனங்களினுள் அழைத்துவந்து மனிதர்களை முழுச்சோம்பேறி ஆக்கிவிடுகின்றது.

ஒருவனின் சுய முன்னேறத்தில் ஏராளமான காரணங்களை தோரணங்களாகக்கட்டி தயக்கம் திருவிழா கொண்டாடுகின்றது, தன்னம்பிக்கையோ இந்த திருவிருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தையின் மனோநிலையினைப்போல பரிதவிக்கின்றது. உலகின் வெற்றியாளர்கள் பலரின் வாழ்கைக்குறிப்புக்களை எடுத்துப்பாருங்கள், அவர்கள் சில நடவடிக்கைகளை தமது வாழ்க்கையில் எடுப்பதற்கு தயங்கியது கிடையாது என்பது தெரியவரும்.

சீனாவின் பிரபல தொழிலதிபரும், அந்த நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஹ_கான் ஸியாங் தெரிவிக்கும் கருத்தினை பாருங்கள், “ ஆரம்பகாலத்தில் நான் பல தொழில்ரீதியான சரிவுகளை கண்டேன், சொல்லப்போனால் அதற்குரிய காரணங்களை கண்டறியவே நான் தயங்கியவனாகவே இருந்தேன். இறுதியில்த்தான் தயக்கமே என் தொழில் எதிரி என்பதை தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

எம்மில் பலருக்கு தொழிலில் மட்டுமின்றி பழக்கவழங்கங்களிலேயே தயங்கள் உண்டு. குறிப்பாக சிலரை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மற்றவர்களிடம் சகயமாகப்பழகவே தயக்கமாக இருக்கும், இன்னும் சிலருக்கு தம்மிடம் பல திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டத் தயக்கம் இருக்கும், வேறு சிலருக்கு சந்தர்ப்பங்கள் தானே அமைந்தாலும் கூட, அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தவே தயக்கமாக இருந்து அந்த சந்தர்ப்பங்களை மட்டும் இன்றி வாழ்கையினையே தொலைத்த சம்பவங்கள் பலவற்றை நாங்கள் காணலாம்.
ஏன் சிலர் தமது காதலை வெளிப்படுத்தவே தயங்கி அதிலும் தோற்றுப்போன சம்பவங்கள் சினிமாக்களில் மட்டும் இன்றி நியத்திலும் உண்டு.

கீதையிலேயே கண்ணன் அர்சுனனிடம், “கடமையை செய் பலனை எதிர்பாராதே” என விளக்கம் கொடுகின்றனார். அதாவது நீ செய்யவேண்டிய ஒரு செயலின் பலாபலன்களை கருத்தில் கொள்ளாது, எந்த வித தயக்கமும் இன்றி அந்த கடமையினை செய்! வெற்றியும் தோல்வியும் உன் செயற்பாடுகளாலும், சூழ்நிலைகளாலும் உருவாகும் என்கின்றார்.

ஏன் ஒருவிதத்தில் கீதை எனும் புனித உபதேசம் கூட ஒரு தயகத்தின் காரணமாக தயக்கத்தை அகற்றவே உருவாகியது. போர்க்களம் புகுந்தும்கூட தர்மத்தை நிலைநாட்ட யுத்தம் செய்யவேண்டிய அர்ச்சுனன், எதிரில் உள்ளவர்களும் தனது சகோதரர்கள் என நினைத்து யுத்தம் செய்ய தயக்கம் கொள்கின்றான். அந்த தயக்கத்தை போக்கி அவனை நெறிப்படுத்தவே கீதா உபதேசத்தை பரந்தாமன் அருளினான்.
அர்சுனனின் தயக்கத்தை பரந்தாமன் போக்கியதுபோல எமது தயக்கங்களை எம் அறிவு களையவேண்டும்.
நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தயக்கங்களால் கைவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் அதை எண்ணி வேதனையடைவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும்.முக்கியமான ஒன்றை கவனிததுப்பாருங்கள், உங்களிடம் அதீத திறமைகள் இருக்கும், ஆற்றல்கள் இருக்கும், அனால் உங்களைவிட அறிவிலும், திறமையிலும் குறைந்தவர்கள், உங்கள் துறையில் விற்பன்னர்களாக இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள்!, அதேபோல நீங்கள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பங்களை பெற்றுஅவர்கள் முன்நேறி இருப்பார்கள். காரணம், அந்த விற்பன்னர்களுடன் நெருக்கமுடைய நீங்கள் தயங்கியதும், பின்நின்றதுமே ஆகம். அது மட்டுமின்றி உங்களைவிட திறமை குறைந்த அவர்களே இவ்வாறு மன்னேற முடிந்திருந்ததென்றால் அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருந்தால், சும்மா பிரட்டிப்போட்டிருக்கமாட்டீர்களா?

தயக்கம் கூடாது என்பதற்காக ஆராயமல் ஒரு செயலில் தணிந்து இறங்குவது என்று பொருள் கொள்ளவும் கூடாது. சரி…தயக்கங்களை எவ்வாறு களைவது? ஒரு மழைநாளில் நனைந்துகொண்டு வீதியால் செல்லவேணடும் என உங்களுக்கு ஒரு ஆசை இருக்கலாம்! ஆனால் தயக்கம் இருக்கும்…விட்டுவிங்கள் தயகத்தை மழைவந்தவுடன் வீதிக்கு இறங்கி நடவுங்கள், இப்படி அன்றாடம் உங்கள் சின்னச்சின்ன ஆசைகளுக்கு (விபரீதம் இல்லாத ஆசைகள் மட்டும்) எற்படும் தயங்கங்களை தகர்க்க ஆரம்பியுங்கள். உங்களை நாளாந்தம் புதுப்பித்துக்கொள்ளுங்கள், கண்ணாடிக்கு முன் நின்று, உங்கள் பிம்பத்தை பார்த்து கட்டளை இடுங்கள், நீ சாதிக்கப்பிறந்தவன் என்று அறிவுறுத்துங்கள், உங்கள் துறைகளில், உங்கள் திறமைகளை மேலும் மேலும் மெருகூட்டி வையுங்கள், உங்கள் திறமைகளை கால ஓட்டத்திற்கு தக்கவாறு மெருகேறறுங்கள், அவற்றை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள் கிட்டும்போது தைரியமாக எழுந்து நில்லுங்கள், இருக்கும் மட்டும்தான் புல்லும் மலைபோல தோன்றும், எழுந்துவிடால் மலையும் புல்தான்…

Tuesday, February 28, 2012

வானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் ……


தேடல்
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்று ஒரு பழமொழி உண்டு. தயவு செய்து முன்னேறத்துடிப்பவர்கள் உங்கள் ஞாபகங்களில் இருந்து அந்த பழழொழியினை அழித்துவிடுங்கள், அல்லது வழக்கொழிந்துவிடச் செய்துவிடுங்கள். முன்னேறத்துடிப்பவர்களுக்கு அந்த பழமொழியில் சற்றும் உடன்பாடு வரக்கூடாது. எல்லோருமே எதையாவாது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே சாதித்து வெற்றிக்கனிகளை பறித்து புசித்தக்கொண்டிருப்பதை எம்மில் பலர் கீழே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு செயலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் பொறுமையுடனான கால வரையற்ற தேடல்கள் எங்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். இங்கே தேடல் என்று சொல்லும் போது உங்களுக்கான வெற்றிப்பாதையின் கதவுகளை கண்டறிவதற்கான உங்கள் பயணமே தேடல் என்ற நிலையாகின்றது. ஆக வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் மிக பிரதானமாக இருக்கவேண்டியது தேடல் உணர்வு.

ஓன்றை யோசித்துப்பாருங்கள் நாடுகாண் பயணங்கள் என்ற ஒரு தேடல் மட்டும் அன்று இல்லாது போயிருந்தால் இன்று உலகத்தில் அரைவாசி நாடுகளே காணமற்போயிருக்கும். ஏன் அதையும் விட முன்னோக்கிப்போனால் மனித இனத்தின் காட்டு வாழ்க்கையில் இருந்தே தேடல்கள் ஆரம்பித்துவிட்டன என்று கூறலாம். அங்கு மட்டும் தேடல்கள் இல்லாது போயிருந்தால் இன்று மனித இனம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியுமா? அதேபோல மார்க்கோனியின் தேடல், தோமஸ் அல்லாவின் தேடல், சுவாரிகினின் தேடல், கிரகாம் பெல்லின் தேடல், கலிலியோவின் தேடல் என்பவை தான் முறையே எங்களுக்கு வானொலி, மின்குமிழ், தொலைக்காட்சி, தொலைபேசி, வான்வெளிப்பயணங்கள் என்பனவற்றை தந்திருக்கின்றன. " என்னத்தை தேடி என்ன செய்வது? எல்லாத்தையும் கொண்டா போகப்போறோம் ""எனக்கு போதுமான பணமே போதும், அதிகம் பணம் சம்பாதித்து சாதித்து பணக்காரன் ஆகிவிட்டால் ஒருபோதும் நின்மதியாக வாழவே முடியாது "

எம்மில் பலர் அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருக்கும் தத்துவ முத்துக்களே இந்த சம்பாசனைகள்;. இப்படிப்பேசிக்கொண்டிருப்பவர்கள் முழுமையாக தேடுவதற்கு முயற்சி செய்யாதவர்களே, எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் இவர்களால் தேட முடியாது. இந்த நிலையில் இவர்களது மேற்படி பேச்சுக்கள் தங்களையும் கெடுத்து சுற்றி இருப்பவனின் மனதிலும் தேடலின் வெறியை மழுங்கடிக்கும் விஷம் என்றே கூறவேண்டும்.

ஒருவன் தேடல் ஒருபோதும் அவனுக்கு மட்டுமே பயன்பாடுகளை சந்துவிட்டுபோய்விடுவதில்லை. வேண்டும் என்றால் அந்த தேடலில் ஈடுபட்டவனுக்கு அதற்குரிய பணத்தையும், வரலாற்றுப்புகழையும், அந்த தேடல் மூலம் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அந்த ஒருவனுடைய தேடல் மூலம் பயன்பெறப்போவது பலராகவே இருக்கும். மார்க்கோனியின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்தந்தது? அலக்ஸ் ஆன்டர் கிரகம் பெல்லின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்பட்டது? இல்லையே. சரி இவர்கள் சொல்வதுபோலவே உழைத்து பணம் சேர்த்து எதை நான் காண்பது? ஏன்ற கேள்விக்கே போவோம்.

பணம் சேர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும்? தொழிலில் தேடல்கள் மூலமான ஒரு தொடக்கம் வேண்டும். இவர் மட்டுமா தொழில் செய்யப்போகின்றார்? இல்லை அவர் லாபம் அடைய அடைய நிறுவனம் வழர்ச்சியடைந்து, ஊழியர்களின் எண்ணிக்கையும் கூடுதலடைகின்றது. சிந்தித்துப்பாருங்கள், சும்மா இருந்த ஒருவர் தேடல் வயப்பட்டு செயலில் இறங்கினால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினையும் பெற்றுத்தரமுடிகின்றது! தேடல்கள் என்பவை முடிவிலி, தொடர்ச்சியானவை, அவற்றுக்கு முடிவுகள் ஒருபோதும் இல்லை. தொழில் ரீதியான தேடல்களால் ஒருவன் அடைந்துகொண்டு செல்வது கண்டிப்பாக மேலும் மேலும் சிறப்பு என்பதுதான்.

உண்மையில் நடந்த இரு நண்பர்களின் கதை இந்த வியாபார வாழ்க்கை தேடல்களுக்கு நல்லதொரு சம்பவமாக இருக்கும் என நினைக்கின்றேன். கொளதமனும், சாரங்கனும் பாடசாலையில் இருந்தே நண்பர்கள், இரண்டுபேரும் பின்னர் பொறியில் துறையிலும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்து கணினி பொறியியல்த்துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் இருவரினதும் குணாதிசியங்கள் பற்றி குறிப்பட்டே அகவேண்டும். கௌதமன் ஒரு யதார்த்தவாதி, படிக்கும் காலங்களில்க்கூட படிப்புக்கான நேரத்தை எப்போதும் இழக்கவிரும்பமாட்டான். புறபாடவிதானங்களிலும் அவன் ஈடுபாடு காட்டுவது இல்லை. "படித்து பட்டம் பெற்றால்த்தான் சாதிக்கமுடியும் " இந்த காலத்தை வீணாக்குவது முட்டாள் தனம் என்பதுதான் அவன் தன் மனதில் வைராக்கியமாக காத்துவந்த வேதம். வகுப்பிலும், பாடசாலையிலும் அவனே முதன்மையானவன்.

சாரங்கன் அப்படி அல்ல! அப்போதே அவனுக்கு கலை ஆர்வம் கூடுதலாக இருந்தது. பாடசாலை நிகழ்வுகள் அனைத்திலும் அவனது கவிதைகள், பேச்சுத்திறமைகள் மெருகூடின. பெரும்பாலும் படிக்கும் நேரங்களைவிட அவன் கையில் பயன்தரக்கூடிய அறிவியல் புத்தகங்களே அதிகமாக இருந்தன. அப்போதே அவனுக்குள் புதியவற்றை தெரிந்துகொள்ளும் தேடலும், தனது துறையில் மற்றவர்களின் முறைகளையும் பற்றியெல்லாம் தேடிக்கொண்டிருப்பான். உயர்தர பெறுபேறுகள் வந்தபோது மிகச்சிறப்பாக கொளதமனுக்கே பெறுபேறுகளைப்பெற்று முன்னிலை வகித்தான். ஆனால் சாரங்கனும், கொளதமன் அளவுக்கு இல்லை என்றாலும் கூட பல்கலைக்கழக பொறியியல்த்துறைக்கு தெரிவாகியே இருந்தான். பின்னர் பல்கலைக்கழகத்திலும் கொளதமனே பெரிதாக பேசப்பட்டும் பெறுபேறுகள் பெற்றும் வந்தான். சாரங்கனது பெறுபேறுகள் சராசரியாகவே இருந்து இருவரும் பட்டத்துடன் வெளியேறினர்.

இருவரும் ஒரே வேளையில் தனித்தனியாக கணினி மென்பொருள் நிறுவனங்களை சிறிய அளவில் தொடங்கி தொழில் செய்தனர். கௌதமன் வழமைபோலவே கடுமையாக உழைத்து வந்தான். அனால் சாரங்கனது வியாபாரப்பயணம் அப்படி இருக்கவில்லை. சாதாரணமான நேரங்களுடனேயே அவன் தொழில் புரிந்துவந்தான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஓராண்டு முடிவதற்குள்ளேயே சாரங்கனின் நிறுவனம் மூன்று மடங்கு வழர்ச்சி பெற்று பாரிய இலாபம் பெற்றான். காரணம் என்னவாக இருக்கும் என நீங்களே அனுமானித்திருப்பீர்கள். ஆம் காரணம் சாரங்கனின் தேடல்கள்தான். அவன் பெரும்பாலான நேரங்களில் தனது தொழிலில் மேல் நாடுகள், மற்றும் பிறநாடுகளில் கையாளப்படும் முறைமைகள், புதிய தொழிநுட்ப புகுத்தல் என்பவை பற்றி தேடித்தேடி தனது தொழிலில் புகுத்தினான் அதனால் அவன் அந்த வெற்றியை பெற்றான்.

ஆகவே ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடுகின்றது. திறமைகள் மட்டும் இருந்தும் தேடல்கள் இல்லை என்று ஆகிவிட்டால் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவது என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் என்பதுதான். விஞ்ஞானத்தின் மூலாதாரம் தேடல் என்பது மட்டும் இன்றி தனக்குள்ளான ஒரு தேடல்கள் தான் ஞானத்தை தரும் என்று ஆஞ்ஞானமும் சொல்கின்றது. தேடல் சிந்தனை என்பது ஒரு மனிதனின் மூளையில் எப்போது அலாரம் அடிக்கும் என்பதை சொல்லி விடமுடியாது. எந்த கணப்பொழுதிலும், ஒரு சம்பவத்திலும், சில உரையாடல்களிலும் கூட தேடல்கள் தொடங்கிவிடலாம். சோம்பலில் படுத்துக்கொண்டிருந்த நீயூட்டன் மீது அப்பிள் விழுந்த அந்த கணத்தில்த்தான் அவனது புவியீர்ப்பு பற்றிய தேடலும், அதன்பின்னரான கண்டுபிடிப்பும் உண்டாகியது என்பதை மறந்துவிடாதீர்கள்..
ஆகவே நீங்கள் புதிதாக ஒன்றையும் தேடும் பொறுப்பை உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுவிட்டு போகவில்லை. அவர்கள் உங்களுக்காக பலவற்றை தேடி வைத்துவிட்டே சென்றுள்ளனர். ஆகவே இப்போது நிங்கள் தேடவேண்டியது உங்கள் துறைகள் எதுவோ அவற்றை மேலும் சிறப்புறச்செய்து எவ்வாறு முன்னேறுவது என்பது மட்டுமே.. என்ன தேடத்தொடங்கிவிட்டீர்களா??தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும், காதல் போல தேடல் கூட ஒரு சுகமே..

Sunday, February 26, 2012

மகிழ்ச்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள்.


பூமியில், மனிதனின் பரிமாணம் என்பது கூர்ப்படைந்துகொண்டு செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரிமாணம் என்பது வளர்ச்சியடைகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்ற போதிலும், மனிதன் பரிணமிக்கப்பட்ட நோக்கமான – பிறத்தல், இருத்தல், மகிழ்தல்;, மரணம்………..என்பதில் முக்கியமான மகிழ்தல் என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கின்றது என்பது உலகலாவிய உளவியல் கணிப்பு.

உலகமெங்கிலும், மகிழ்சியை வழங்குவதற்கான மகிழ்வகங்களும், ஆடம்பர உல்லாசபுரிகளும், பிறக்கின்ற வேளையிலும், மகிழ்ச்சி என்பது பெரும்பாலனவர்களுக்கு எட்டாக்கனியாக ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. உளவியலின் தந்தை எனப்போற்றப்படும் ஷிக்மென் பிரைட்டும் - மகிழ்ச்சியை மையமாகவைத்தே காரண காரியங்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை, சுழன்றுகொண்டிருக்கின்றது என வாதத்தை முன்வைத்தாலும், இன்று பல காரியங்களில் ஈடுபடுகின்ற மனிதன் மகிழ்ச்சியை தொலைத்த கதை புதுமையதானதுதான். மகிழ்ச்சியை தொலைத்த மனங்களுக்கு மருந்தாக மாறாது விட்டாலும், சிறு கைவைத்தியமாக இருக்கின்ற மகிழ்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள் என்கின்ற இவ்வாக்கம் சாதாரண வாழ்வியலில் மனிதன் கடைப்பிடித்து மகிழ்ச்சியின் பக்கத்திலேனும் குடியேறுவதற்கு குடிசை போட்டுத்தரும் என்ற நம்பிக்கையுடன் குறிப்புக்களை ஆரம்பிக்கின்றேன்.

குறிப்பு -1
வாழ்க்கை எப்போது நேர்த்தியானது என்கின்ற எண்ணத்தை தவிருங்கள்.
எங்களில் உள்ள பெரிய குறைபாடு, எல்லா விடயங்களும், எல்லாக்காரியங்களும், நேர்த்தியாக இருக்கவேண்டும், வெற்றி மட்டுமே காரியங்களின் இறுதிப்படி என்று கணிப்பிட்டுக்கொள்வதாகும். தோல்விகளும், வெற்றியை நோக்கிய படிக்கற்கள் என்பது பல இடங்களில் மறந்துபோனதாகவே நினைக்கத்தோன்றுகின்றது. மின்குமிழை உலகத்திற்கு படைத்த தொமஸ் அல்வா எடிசனை ஒருபத்திரிகையாளர் பேட்டிகாணும் போது "நீங்கள் தங்குதன் இளையின் மூலமாக சரியான மின்குமிழை படைப்பதற்கு முன்னர் 3000 முறை பிழையான மூலகங்களை ஆராய்து தோல்வி கண்டுள்ளீர்களே?" -இது சலிப்பை தரவில்லையா? எனக்கேட்டபோது, "இல்லை…3000முறையும் நான் வெற்றியடைந்திருக்கின்றேன். எப்டி எல்லாம் ஒரு மின்குமிழ் செய்யக்கூடாது என்பதை கற்றுக்கொள்வதில். என தோல்விப்படிகளைக்கூட வெற்றியாக்கியகதையினை சுருங்கச்சொன்னார். இந்தப்பக்குவம் எம்மத்தியில் எத்தனைபேருக்கு இருக்கின்றது?

நாளாந்த வாழ்க்கையில், நாம் காண்கின்ற சாதாரண மனிதர்கள் தொடக்கம், சமுகம் வரை நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதும், எப்போதும் எம் சிந்தனையோட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பதும் எல்லோரதும் விருப்பமாக இருக்கின்ற போதிலும் யதார்த்தம் என்னவோ, எதிர்மாறானதாகவே இருக்கின்றது. மனிதன் பல்வகைமை உடையவன் தனிமனித ஆளுமை குடும்பப்பின்னணி, கல்வி, இயல்பூக்கம், என்பன மனிதர்ளை ஒருவரிடமிருந்து இன்னொருவரை வேறுபட்டவர்களாக படைத்திருக்கின்றது. இதுதான் மனிதனின் அழகும், தனித்துவமும் எனலாம். இருந்தபோதிலும் இந்த உண்மையினை ஜீரணிக்க மறந்து நாளந்த அலுவல்களில் முரன்பாடுகளுக்குள் மூழ்கிப்போய் மகிழ்ச்சியை மறக்கவேண்டிய அவலநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
"கிரேக்க தத்துவம் ஒன்று இந்த உண்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது". வாழ்க்கை என்பது உண்மையில் பொய்மையே - இருந்தபோதிலும்இந்த உண்மை தெரியாததுபோல வாழ்ந்துகொண்டு போவதுதான் வாழ்க்கையை சந்திக்க எதனிலும் சிறந்த வழி. மனித வேறுபாடுகளை அங்கிகரிப்போம்! மனங்களின் மகிழ்சியை கொண்டாடுவோம்.

குறிப்பு -2
மற்றயவர்களுடனான தேவையற்ற ஒப்பீட்டை தவிர்தல்.

இன்று பலரது சந்தோசத்தை சாப்பிடும் விடயமாக மற்றவர்களுடனான ஒப்பீடு அமைந்துவிடுகின்றது. அண்மையில் நண்பர் ஒருவரை சந்தித்தபோது, அவர் மகிழ்ச்சி தொலைந்த முகம் என் கேள்விக்குறிகளுக்கு வழியமைத்துக்கொடுத்தது.நீண்ட நேர சம்பாசனையின் பின்னர், விடயம்.... அவர் அலுவலகத்தில் அவர் பின்னால் உத்தியோகம் பெற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதும், அவர்கள் வசதிபடைத்தவர்களாக மாறியிருந்தமையும் இவரது கவலைக்கான அடிப்படை வித்துக்களாக அமைந்திருந்தன.
நண்பரை நீண்டநாள் அறிந்தவர் என்ற முறையில் அவர்கூட, நல்ல உத்தியோகத்திலும், நல்ல பொருளாதார நிலையில் இருந்தும்கூட, தேவையற்ற ஒப்பீடுகள் அவரது சந்தோசத்தை அவருக்கு காட்டமறுத்த இருண்ட கண்ணாடியாகியது.

குறிப்பு -3
அன்பு செலுத்துங்கள்.
அன்பு என்பது கண்ணாடிபோன்றது. அன்பைக்காட்டித்தான் அன்பைப்பார்க்கமுடியும். அன்பு விதைக்கப்பட்டால்த்தான் அன்பின் அறுபடை பற்றி நாம் அக்கறைப்படுவதில் நியாயமும் இருக்கும். இன்று எம்மில் பலரில் இனங்காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்று அன்பை எதிர்பார்க்கின்ற நாம் கொடுப்பதில் மட்டும் குறைப்பட்டுக்கொள்கின்றோம்.
பல குடும்பப்பிணக்குளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைவது இதுவேதான்.இது இரண்டு பிச்சைக்காரர்கள் ஒருவரிடம் மற்றயவர் பிச்சை கேட்பதற்கு ஒப்பானது. சிலரிடம் இருக்கின்ற பொதுவானதொரு தவறு அன்பை வெளிக்காட்டத்தயங்குவதாகும். அன்பை வெளிப்படுத்துதல் என்றால் என்ன? என சில புருவங்கள் உயர்வது புரிகின்றது. இது நாளாந்தப்பணிகளில் மற்றயவர்களுக்கு உதவி செய்தல் ஒத்துணர்தல் செவிமடுத்தல், மதிப்பளித்தல், என்கின்ற கருமங்ளோடு காவிச்செல்லப்படக்கூடியதாகும்.

குறிப்பு -4
மகிழ்ச்சியான வேலைநேரம்.

எங்களில் பலர் உயிரோட்டமான நேரத்தை வேலைத்தளங்களிலேயே செலவுசெய்யவேண்டிய நிர்பந்தத்தில் நீந்துபவர்கள்தான்.இந்த வேலைத்தளங்கள் எம் மகிழ்ச்சியின் பகுதியான விடயம் என்பது யதார்தபூர்வமான உண்மை. மேலைத்தேசங்களில் "Quality work life [QWL] policy" என அலுவலக வாழ்க்கையினை வழப்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஆகக்குறைந்தது எம் அலுவலகத்தை நாம் மகிழ்ச்சியாக்க ஈடுபாட்டுடன் வேலை செய்தல் நட்புறவை வழர்த்தல் முரண்பாடுகளை தவிர்த்தல் எம்சூழலை நாமே உருவாக்குதல் என நாம் செய்யக்கூடிய மாற்றங்களை ஆரம்பித்துவைப்பது எம் சந்தோசத்திற்கு நாம் அத்திவாரமிடுவது போன்றதாகும்.


குறிப்பு -5
உடல் நலம்.

மகிழ்ச்சி என்பது மனத்துடனும், உடலுடனும் இரண்டறக்கலந்த விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. மகிச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு நாளந்த உடல் ஆரோக்கயத்தில் கவனம் செலுத்துதல் அவசியமாகின்றது. நித்திரை விழித்தல், உளநெருக்கத்தை ஏற்படுத்தும் நீண்ட வேலைநேரம், உணவுப்பழக்கவழக்கம், என்பன இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம்களாகும்.

குறிப்பு -6
எனக்கே எனக்காய்


எங்களில் பலருக்கு நாளாந்தம் எழுகின்ற சின்னச்சின்ன ஆசைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்வதில் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது. குளிர்ந்த மழைநாளில் வீதியில் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், மலையோரத்து குடிலில் வசிக்கவேண்டும் என்பதும் கூட இதில் அடங்கும். இருந்தபோதிலும் வாழ்க்கை சீரோட்டத்தில் இவை நிறைவேறாத பட்டியலில் அடங்கிவிடுகின்றது. இதற்கு காரணங்கள் என்ற வகையில் நேரம், பணம், வசதி, பாதுகாப்பு என்பன விபரிக்கப்படலாம். இருந்தபோதிலும் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய முனைவது உங்கள் மகிழ்ச்சியை தூண்டும் வழியாக அமையும் என்பதை மறந்துவிடவேண்டாம். இந்த விருப்பக்கள் உங்களையோ, மற்றவர்களையோ இன்றும் என்றும் பாதிக்காதவகையில் பாhர்த்துக்கொள்ளுதல் விரும்பத்தக்கது.
குறிப்பு -7
திட்டமிடல்
நம்வாழ்க்கைப் பயணத்தில் எல்லோரும் ஏந்திச்செல்லவேண்டிய துடுப்பு திட்டமிடல். இன்னும் இரண்டு வருடத்தில் என்ன தொழில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தொடக்கம் தனிமனித வழர்ச்சிக்கான பண்புகளையும் பாதைகளையும் திட்டமிடல் என்பது எம்வாழ்க்கையை தொடர்ச்சியாக மகிழ்ச்சி என்கின்ற பாதையில் நடத்தி செயல்வலதற்கு எதனிலும் சிறந்த வழி.
உளவியல் ரீதியாகச்சொல்வதானால்க்கூட நாமொன்றைத்திட்டமிட்டு அதை அடையும்போதுதான் மகிழ்ச்சி என்கின்ற உணர்ச்சி பிரசவம் எடுகின்றது. Mc Cleland Achievement teary உம் இதை ஆமோதிக்கின்றது.திட்டமிடல் என்பதும் கூட மகிழ்ச்சியான விடயம்தான்
"தத்துவம் அஸி – நீ அதுவாகின்றாய்- அதாவது நீ எதை நினைத்துக்கொண்டிருக்கின்றாயோ நீ அதுவே ஆகின்றாய் என்கின்றது உபநிடதம். இதைத்தான் இந்தியாவின் அணுசக்தியின் தந்தை எனப்போற்றப்படும் டொக்ரர். அப்துல்கலாமும் கனவு காணுங்கள் என்று வாழ்க்கையின் எதிர்காலத்தை பார்வைப்புலப்படுத்தும் முயற்சியின் உந்துதல் கொடுத்தார். நேற்று முடிந்துபோன விடயத்திற்கான விமர்சனத்தில் அக்கறை காட்டுவதை விட நாளை நடக்கப்போகும் விடயத்திற்கு ஆலோசனை கேட்பது நல்லது என்பது இந்திய வர்த்தகத்தின் வெற்றியாளர் அம்பானியின் கருத்து. "Pleasure on your Hand" என்பது மேற்கத்தேயச் சிந்தனை அதாவது, "உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்த்தான் இருக்கின்றது";. மனத்திற்கு மருந்திடும் மகிழ்ச்சியை காத்திட இந்த மணிமுத்துக்கள் உதவின அதுவும் மகிழ்ச்சியே.

Saturday, February 25, 2012

நண்பர்களே ஒரு நிமிடம்....


நண்பர்களே ஒரு நிமிடம்....

நட்பு கொண்டவர்கள் நாணையத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். இருவருக்கும் நட்பின் அனுபவிக்கும் உரிமை சமனானதே.
அதைவிட்டுவிட்டு ஒருவர்மேல் ஆதிக்கம் செலுத்த தலைப்படும்போது தான் நட்பு நரகமாகிவிடப்பார்க்கின்றது.

சரியோ தவறோ எம் நண்பர்களையும் ஒரு முடிவு எடுக்கும்போது சேர்ந்து அலோசிக்கவேண்டும். பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, அதை பக்குவமாக சொல்லி திருத்தி எடுப்பதில்த்தான் நட்பின் திறமையே இருக்கின்றது.

நண்பர்கள் வாக்குவாதப்படுப்போது ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள்,
'இது எனக்கும் உனக்குமான முரண்பாடு இல்லை! நீ இப்போது முன்வைக்கும் கருத்திற்கும், எனது தற்போதைய கருத்துக்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை.

தினம் மாறும் கருத்துக்களால் மகத்தான மாறாத நட்பை இழக்கவேண்டுமா? ஒரு கணம் யோசியுங்கள்.
மனிதன் உணர்வுகளின் சங்கமம். எப்போதும் அவன் ஒரேபோல சிரித்துக்கொண்டிருப்பவனும் இல்லை, எப்போதும் துயரத்தால் அழுதுகொண்டிருப்பவனும் இல்லை. சமுகத்தாங்கங்கள், உளவியல் மாற்றங்கள் என்று எண்ணில்லாத அலையடிப்புக்களை தாங்கவேண்டிய உங்கள் நண்பனின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.

ஓர் சிறிய மனக்கசப்பு என்பதற்காக பல நாட்கள் பழகிய இனிமையான பொழுதுகளை, அவரிடம் கண்டு இரசித்த முகபாவங்களை, அற்புதமான பகிரல்களை, சில மகிழ்ச்சி பகிர்வுகளை, ஒரேயடியாக மறந்துவிடமுடிகிறதா? நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே!

இப்படியாக எத்தனையோ எத்தனையோ சின்னச்சின்ன விடயங்கள் எம்மிடையே மிகப்பெரிய முரண்பாட்டு மதில்களை எழுப்பிவிடுகின்றது. அட உலகமே ஒருமித்து நின்று பிரித்துக்கட்டிய பேர்லின் சுவரே தகர்ந்துவிட்டது. உங்கள் சின்னச்சின்ன நட்பூடல்கள் தகர்ந்துவிடாதா என்ன?
 —
 

Friday, February 24, 2012

வர்ணங்களும் வாழ்க்கையும்


உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதனால்த்தான் ஓவியப்பாடம் நடத்தப்படும்போது அல்லது ஓவிய பயிற்சிகளின்போது ஒரு பொருளை பார்த்து வரைய சொல்லும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களை கொடுக்கின்றனர்.
அதேபோல ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும் அவ்வளவுதான். 

உதாரணத்திற்கு உலகில் அனைத்துமே ஒரே நிறமான வெள்ளையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் உலகம் நன்றாகவா இருக்கும். நிறைய வர்ணங்கள் சேரும்போதுதானே அனைத்தும் நன்றாக இருக்கும்.
அதேபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறங்கள் உண்டு. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு நிறத்தையும் இரசிப்பதுபோல நாம் ஒவ்வொரு குணங்களையும் இரசிக்கதொடங்கினால் எதுவும் ஆனந்தமே.

இவர் இப்படி, இவர் இதுதான், இவர் சரிவரமாட்டார் இவர், துரோகி, இவர் எதிரி, என்ற பிறேம்களை எம் மனம்தான் போட்டுக்கொள்கிறது. அந்த பிரேம்களை புடுங்கி எறிந்துவிட்டு, எல்லோரும், எல்லாமும், என இருந்து, அத்தனையையும் இரசிக்கப்பழகினால் யாவருக்கும் சந்தோசமே அல்லவா? 

எனவே வர்ணமயமாக வாழ்வோமா?
 

Tuesday, February 21, 2012

நம்பிக்கை



ஒருவன் தானும் தன் நம்பிக்கையும் அருகருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக கனவு கண்டான்.


ஒவ்வொரு தடவையும் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் நடந்து சென்ற தரையில் இரண்டு ஜோடி பாதங்கள் தடம் பதித்திருந்தன.



அவனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவனோடே நடந்து வந்து கொண்டிருந்தது நம்பிக்கை.
ஒரு சந்தேகத்தில் நடந்து வந்த பாத தடங்கலை அவன் திரும்பிப்பார்த்தான்.

ஒரு சில இடங்களில் ஒரே ஜோடி பாதங்கள்தான் இருந்தன.
ஆழ்ந்து ஜோசித்தபோது அவை தான் துன்பமாக இருந்த கால கட்டங்கள் ஒவ்வொன்றும் என்பதை தெரிந்துகொண்டான் அவன்.

நம்பிக்கையை பார்த்து பெருமூச்சோடு கேட்டான் அவன்
'என்னோடு தொடர்ந்து பயணித்த நீ.. என் துக்க காலங்களில் என்னை விட்டு ஓடிச்சென்றிருக்கிறாயே! ஏளனம் தொனிக்க கேட்டான்.

அதற்கு நம்பிக்கை சொன்ன பதில் :_

நான் உன்னை விட்டு ஒருபோதும் விலகியது கிடையாது. உனது துன்ப காலத்தில் நடக்க முடியாமல் படுத்துவிட்ட உன்னை நான்தான் தூக்கி கொண்டு நடந்து வந்திருக்கின்றேன். நிதானமாகப்பார் அவை எனது காலடித்தடங்கள்.

Monday, February 20, 2012


முன்னேற்றத்திற்கு வழி திறக்கும் மோட்டிவேஷன்.


ரையறுக்கப்பட்ட வளங்களை அடைவதற்கு வரையறையற்ற தேவைகளுடன் இன்று உலகில் வாழும் ஒவ்வொருவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
எங்கள் தேவைகள், எங்கள் இலட்சியங்கள் இவை என வரையறைகளை வகுத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில் பங்கு பற்றுபவர்கள் பலர் தமது விடா முயற்சியினால் குறிப்பிட்ட அளவுக்கு முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஏதோ வேலை ஒன்று இருந்தால் சரி, கையில் கொஞ்சம் பணம் இருந்தால் அதுபோதும் என்ற எண்ணத்துடனேயே இன்று பலர் அவர்களின் பின்னால் உலக ஓட்டத்தில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
நாளைகள் என்ற சிந்தனைகளே அற்ற நிலையில் இன்று பல இளைஞர்கள் தங்கள் காலங்களை வீணாக்கிக்கொண்டிருப்பது இதில் கொடுமையிலும் கொடுமையானது.
இன்று உலகத்தில் சாதித்து காட்டியவர்கள் ஒவ்வொருவரையும் எடுத்தப்பாருங்கள், அவர்கள் வீட்டு கதவை எந்த ஒரு அதிஸ்ட தேவதையும் வந்து ஒருமுறை தட்டிவிட்டுப்போகவில்லை.
அவர்கள் தங்கள் சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும், தங்கள் இலட்சியங்களில் கொண்டிந்த இலட்சிய வெறிகளாலும், எல்லாவற்றையும்விட அவர்கள் தங்கள் தொழில்களின் மேல் வைத்திருந்த அர்ப்பணிப்பகளாலுமே அந்த எல்லைகளை அடைந்திருக்கின்றார்கள் என்பதற்கு மாற்கருத்து ஏதாவது இருக்கமுடியுமா?
ஒருவகையில் சொல்லப்போனால் இப்பேற்பட்ட கொள்கைகள் எந்தக்கணமும் மாறாத, அதேவேளை எதிர்மறை சிந்தனைகள் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உதிக்காததையே அதிஸ்டம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
நாம் இன்று பார்க்கப்போகும் விடயம் இந்த வெற்றியாளர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு ஒரு உந்துதல், வலுவூட்டல்கள் எவ்வளவு அவசியம் என்பதையும், சாதிக்கத்துடிக்கும் ஒருவனுக்கு இப்பேற்பட்ட வலுவூட்டல்கள் எத்தனை தூரம் வெற்றிகளுக்கான படிக்கட்டுகளாக அமையும் என்பதையே.

ஒருவனுக்கான வலுவூட்டல் என்பது அன்றாடம் அவன் காணும் காட்சிப்புலங்களிலேயே அவனுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்கின்றார் உலகின் தலைசிறந்த வலுவூட்டல் பயிற்சியாளர் ஜோன் பெக்லம்.
ஒருவனுக்கு இவ்வாறான வலுவூட்டல்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவனை சுற்றி அவனை வலுவூட்ட நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.
கஜினி முஹம்மதுவுக்கு சிலந்தி காட்டியதுகூட ஒரு வலுவூட்டலே, அதேபோல, அரிச்சந்திரன் என்ற ஒரு நாடகத்தின் வலவூட்டலே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவனை மகாத்மா ஆக்கியது.

ஆனால் இன்றைய வர்த்தகமய உலகத்தில் வலுவூட்டல் என்பது அத்தியாவசிய தேவையாகி வலுவூட்டல் என்பதே ஒவ்வொரு பெரிய நிறுவனங்களுக்கும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. காரணம் அப்படியான வலுவூட்டல் நிகழ்ச்சிகளின் பின்னர் கிடைத்த விடைகள் பிரமாதமாக அமைந்துவிடுவதனால்த்தான்.

பலர் நினைக்கலாம் இதெல்லாம் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் செயற்படுத்தவதுதான் கஸ்டம். இப்படியே எல்லோரும் வலுக்கொண்டவர்களானால் உலகம் என்னத்துக்கு ஆவது என்று!
உண்மையில் கஸ்டம் என்று நினைத்து இதபோன்று கதைபேசுபவர்களை எந்த வெற்றியாளன் வந்தாலும், தேர்ச்சி பெற்ற வலுவூட்டல் பயிற்சியாளர் வந்தாலும் மாற்றமுடியாது. ஏன் என்றால் எவ்வளவுதான் வலுவூட்டல் கிடைத்தாலும் அதை நிறைவேற்ற தேவையான தன்னம்பிக்கை ஒவ்வொருவனினதும் மனங்களில்தான் உள்ளது.
நிற்க.... ஏன் ஒரு சிலர்தான் சிகரம் தொட்டவர்கள் வெற்றியாளர்களாக முன்னுக்கு நிற்கின்றார்களே என்பதற்கான கேள்விக்கு விடை இதுதான்.

உலகில் உள்ள மனிதர்கள் இன்று மூன்றுவகையினர் உள்ளனர்.
நல்லவர்கள், மேலே குறிப்பிட்டதுபோல கேள்விகேட்கும் எதிர்மறை சிந்தனையாளர்கள், அடுத்து வல்லவர்கள்.
இது கண்டிப்பாக அனைவரும் தெரியவேண்டிய விடையம் என்பதால் கொஞ்சம் தனித்தனியே பார்ப்போம்.

நல்வர்கள் யார்?
அனைத்துவிடயங்களையும் நல்லதாகவே பார்ப்பவர்கள் (மகாபாராதத்தில் யுதிஸ்திரன்போல) எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்கள், கடிவாளம் கட்டிய குதிரைகளைப்போல தங்களுக்கு வைக்கப்பட்ட கடமைகள் எவையோ அவற்றை பக்கவாக செய்துமுடிப்பவர்கள், இதற்கு அப்பால் சென்று சிந்திகத்தெரியாதவர்கள். தமது வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் நன்மைகளையே காணத்துடிப்பவர்கள். இவர்களுக்கு மற்றய இரண்டு பகுதியிரையும் கண்டு அறிய முடியாது. மனிதாபிமானம் என்ற வகையில் மற்றவர்களை திருப்திப்படுத்த தம் வாழ்க்கையை நாளாந்தம் இழந்துகொண்டிருப்பவர்கள்.

எதிர்மறையாளர்கள் யார்?
இவர்கள் சற்றும் இடத்தில் நேர்மை, கடமை, கண்ணியம், பொறுப்பு, என்பவற்றின் அகராதியே இருக்காது இவர்களுக்கு இவர்கள் செய்வதுதான் சரி. தாம் மனச்சாட்சிப்படி செய்வது தவறாக இருந்தாலும் தாம் செய்வது சரி என்று வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் குறுக்கு வழியில் வெற்றிகளை குறிவைப்பவர்கள். தொழில் செய்யுமிடவிசுவாசம் என்பது கிடையாது. அடிக்கடி தொழில்புரியும் இடங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவற்றிற்கும் ஏராளமான காரணங்களை அடுக்க கூடியவர்கள் இவர்கள். தமது நலத்திற்காக எதையும் செய்யத்துணிவர்கள். பொறாமைக்குணம் பிறப்பிலேயே குடிகொண்டிருக்கும் இவர்களிடம்.

வல்லவர்கள் யார்?
இவர்களுக்கு நல்லவர்களையும் தெரியும், எதிர்மறையாளர்களை இனங்காணவும் தெரியும். வல்லவர்களிடம் மற்றய இருவரும் அதிக நாட்கள் அணுகமுடியாதவாறு இருக்கும். மற்றயவர்கள் இருவரும் இன்று பேசுவது இவர்களுக்கு ஒருபோதும் கேட்பதற்கு நியாமில்லை, ஏன் என்றால் இவர்கள் சிந்தனைகளாலும். திட்டங்களாலும் மற்றவர்களைவிட 20 வருடங்கள் முன்னுக்கு சென்றிருப்பார்கள்.
எண்ணம் சிந்தனை எல்லாமே குறிக்கோள் குறிக்கோள் குறிக்கோள் என்றே இருக்கும்.
இவர்களே அந்த சிகரம் தொட்ட, தொடும் வல்லவர்கள்.

இன்றைய சமுதாயமட்டத்தில் பார்த்தோமே ஆனால் நல்லவர்கள் 30 வீதமும், எதிர்மறையாளர்கள் 68 விதமும் அந்த வல்லவர்கள் வெறும் 02 வீதத்தினருமே உள்ளனர்.
இப்போது நீங்களே உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள் நீங்கள் யார்?
எப்போது வல்லவராவதாக உத்தேசம்?

வலுவூட்டல்களில் புதிய ஒரு ஆணுகுமறை என்னவென்றால், தனித்தவமாக முன்னேறமுடியாதவர்கள் தங்கள் ரோல் மொடல்களை அப்படியே கொப்பி அடிப்பது. அவர்களின் நித்துவ அறிக்கை, வேலை திட்டங்கள், அவர்களது பேச்சுக்கள், அனுபவங்கள். நுணுக்கங்கள், ஏன் அவர்களது நடை, உடை பாவனை அத்தனையும் போலச்செய்தல், இதிலும் அச்சரியம் என்னவென்றால் ஒரு ஆராட்சி சொல்கின்றது இவர்களும் வெற்றி பெற்றவர்களாக வந்திருப்பதாக..
எனவே இங்கே வெற்றி பெற்ற ஒவ்வொருவனும் எமக்கான வலுவூட்டும் நபரே.
இது நீங்கள் கேட்ட பாடல்தான், அனால் இங்கே உங்களுக்கு விஜய்யோ, ரஹ்மானோ தெரியமாட்டார்கள்...
ஒவ்வொருநாள் பணிகளை தொடங்குமுன்னரும் இந்த பாடலை உணர்வோடு கேட்டு வேலையை தொடங்கிப்பாருங்கள்...

மனம் இருந்தால் நிறையவே இடமும் உண்டு. மனம் மட்டும் வையுங்கள் எராளமான பணம் உங்கள் கையில்...

-Jana